அதிபர் - ஆசிரியர்கள் தொடர்பில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய யாழ். அரசாங்க அதிபர்
மாணவர்களின் வளமான ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு துணைநின்றவர் என்ற பெருமையினை அதிபர் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் (2025/26) - பாடசாலைப் பிரிவுப் போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் அளவுகோல்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்றைய தினம் (15.07.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அடைவு மட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், உற்பத்தித்திறன் சார்ந்த போட்டி மற்றும் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. பாடசாலைகளில் உற்பத்தித் திறன் செயற்பாட்டின் மூலம் அடைவு மட்டங்களை அறிந்து கொள்வதுடன், முன்னேற்றமான பாதையில் செல்ல முடியும். பாடசாலைகளின் கட்டமைப்பில் முன்னரைவிட மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தித் திறன் செயற்பாட்டிற்கு தலைமைத்துவத்தின் பங்கும் அனைவரின் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் அவசியம் என தெரிவித்து, பாடசாலைகளில் அவர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைக்கூறுகளை நேர்த்தியாக செய்வதன் ஊடாக இலக்குகளை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.
சில பாடசாலைகளில் மாணவர்கள் விபரங்கள் கணினி மயப்படுத்தியதன் மூலம் விபரங்கள் இலகுபடுத்தியுள்ளமை தம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டதுடன், ஆசிரியர்களின் நேரசூசி கூட கணினி மயப்படுத்தி நிர்வாக நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னேற்றகரமான மாற்றங்கள்
பாடசாலைகளில் திண்மக் கழிவு முகாமைத்துவம் அவசியம் எனவும் மாணவர்களுக்கு அதனை முறையாக பழக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பாடசாலைகளில் ரம்மியமான - இயற்கையான சூழல் இருத்தல் வேண்டும் என்பதுடன் வகுப்பறைகள், அலுவலகங்களின் சூழலும் மற்றும் வெளிச்சூழலும் அழகாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனால் மாணவர்களின் அகச் சூழலில் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார். நேரமுகாமைத்துவத்தின் அவசியத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும் இதனால் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
உற்பத்தித் திறன் செயற்பாட்டை மாணவர்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தி வழிப்படுத்த வேண்டும் எனவும், இதன் ஊடாக மாணவர்கள் சமூகத்திலும் உற்பத்தித் திறன் செயற்பாட்டை எடுத்துச் செல்வார்கள் எனவும், இதனால் சமூகமும் நாடும் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்து அனைவரினதும் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டு கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |