செம்மணி அகழ்வு பணிகளின் மீள் ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று(15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும், 'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 01' இல் இருந்து 63 என்புத் தொகுதிகளும், 'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 02' இல் இருந்து இரண்டு என்புத் தொகுதிகளும் என மொத்தமாக 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா மன்றில் வெளிப்படுத்தினார்.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையும், நீல நிறப் புத்தகப்பையுடன் (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பையுடன்) மீட்கப்பட்ட சிறுவனின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று அறிவித்திருந்த நிலையில், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினுடைய அறிக்கையும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அடுத்த தவணை
இது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு நீதிவனால் வெளிக்கொணரப்பட்டன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தில் இருந்து காலையில் இரண்டு சட்டத்தரணிகள், மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் என்று கிரமமாக அகழ்வுப் பணிகளில் முன்னிலையாக மன்றில் அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் விசேட நிபுணர்கள் மாத்திரமே அகழ்வுப் பணிகளைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதித்திருப்பதாகவும் மன்றில் நீதிவானால் அறிவிக்கப்பட்டது.
புதைகுழியில் கண்டெடுக்கப்படும் சான்றாதாரங்கள் சம்பந்தமாகத் தேவையற்ற கட்டுக்கதைகளையும், பொருள்கோடல்களையும், விசனங்களையும் மக்கள் மத்தியில் தவறாகக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் மன்றில் அறிவிக்கப்பட்டது.
இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றுக்கு அறிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பான அடுத்த தவணை எதிர்வரும் ஒகஸ்ட் 6ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
