கல்வித்துறை சிக்கல்களை தீர்க்க விசேட நாடாளுமன்ற உபகுழு! டளஸ் பிரேரணை
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக விசேட நாடாளுமன்ற உபகுழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டளஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் மீது உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள டளஸ்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், கொவிட் தொற்று நோய் பரவல், பொருளாதார நெருக்கடி என்று பல்வேறு காரணிகளால் பாடசாலை மாணவர்களின் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களினதும் கல்வி நடவடிக்கையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு
சில மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலர் பாடசாலை மாணவர்களும் கூட இதன் காரணமாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
கற்றல் நடவடிக்கைகளில் தடங்கல், அதற்கான காலம் விரயமாதல் போன்ற விடயங்கள் குறித்து மாணவப் பருவத்தினர் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளை நாம் அனுதாப நோக்குடன் ஆராய வேண்டும்.
அது தொடர்பில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் டளஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார்.