சந்தேகநபருக்கு சிறையில் சிறப்புச் சலுகை - பொலிஸ் அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, 75க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் இரவில் உறங்குவதற்குப் படுக்கை வழங்கிய பொலிஸ் அதிகாரியின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(11.10.2026) பாலைமீன்மடுவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
400 பேர் கையொப்பமிட்ட மனு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நீண்டகாலமாகச் சில பொலிஸாரின் அனுசரணையுடன் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதால், இந்தப் பகுதி மக்கள் வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 3ஆம் திகதி பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவருக்குப் பொலிஸார் விசேட சலுகைகளை வழங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 400 பேர் கையொப்பமிட்ட மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலித் லீலாரத்ன உறுதியளித்துள்ளார்.
39 லீற்றர் கசிப்பு பறிமுதல்
அப்பகுதியில் கடந்த 7ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 20 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து இடம்பெற்ற சோதனைகளின் மூலம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கசிப்பு கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 39 லீற்றர் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்தச் சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் திராய்மடு இளைஞர்கள் தொடர்புகளைப் பேண வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதோடு, எதிர்காலத்தில் திராய்மடு கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் இணைந்து செயற்பட்டால், அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.