பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பில் விசேட நடவடிக்கை: திலீபன் எம்.பி
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் உற்பத்தி கைத்தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி சார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டுக்கான எமது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை எழுச்சி பெறச் செய்யும் நோக்கில் அமைந்துள்ளது. அதற்காக பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து அந்தக் கிராமத்தில் எவ்வாறான உற்பத்திகள் மூலம் அந்தக் கிராமத்தை முன்னேற்ற முடியும் என்பதை இனங்கண்டு அதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் தமது வீடுகளிலிருந்த வண்ணம் உற்பத்தி கைத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சம்மந்தமான வாழ்வாதாரம் வழங்கும் போது அவர்களது சரியான தேவையை இனங்கண்டு சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் பேசி அந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், வன இலாகாவின் கீழ் உள்ள வயற் காணிகளில் தற்போது மக்கள் தமது வாழ்வாதார தொழில்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அதனை விடுவிப்பது மற்றும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளை உருவாக்குதல் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ரத்நாயக்கா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகப் பிரதேச செயலாளர், அபிவிருத்தி குழுத் தலைவர், தவிசாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய ஒரு குழு ஒன்றினை அமைத்து அதனை முன்னுரிமை அடிப்படையில் தெரியப்படுத்தினால் அவசியமான நிலங்களை உடன் விடுவிக்கத் துரிதமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள், திணைக்கள
தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேசபை சபை உறுப்பினர்கள், சமூக
மட்ட அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.