நாடளாவிய ரீதியில் புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள்
யாழ்ப்பாணம்
பிறந்திருக்கும் 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாகவே நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்குத் தீபங்கள் ஏற்றப்பட்டன.
செய்தி - கோகுலன்
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று(01) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
செய்தி - கோகுலன்
வவுனியா
ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. '
அந்தவகையில் இறம்பைக்குளம் நாகபூசனி அம்மன் ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் என்பவற்றில் ஆலயத்தின் பிரதம குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த பலரும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டி
இறைவனை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்
கொண்டனர்.
செய்தி - திலீபன்
மலையகம்
மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
காலை வேளையிலேயே சில பக்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும், இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
செய்தி - திருமால்
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் புதுவருடப் சிறப்புப் பூஜை இன்று காலை நடாத்தப்பட்டது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாகச் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு சமூக இடைவெளியைப் பேணியவாறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று அதிகாலை விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று புதுவருட சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் நீங்கவும் அதனால் பீடிக்கப்பட்டவர்கள் சுகம் பெற்று வழமைக்குத் திரும்பவும் அரசாங்கம், நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிவேண்டி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தினால் புதிய ஆண்டினை குறிக்கும் வகையிலான பஞ்சாங்க நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
செய்தி - குமார்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நிஜோத் குருக்களின் தலைமையில் மூல மூர்த்தியாகிய அம்மனுக்குப் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து அரோகரா கோஷங்களுடன் எழுந்தருளி அம்மாள் ஆலயத்தின் உள்வீதி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
2022 வருடப் புத்தாண்டு பிறப்பு பூஜையில் நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
இதன்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி - ருசாத்