நாட்டில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்
யுக்திய தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் வரை அது தொடரும், எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும் (26) நேற்று முன்தினமும் (25) யுக்திய சுற்றிவளைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யுக்திய சுற்றிவளைப்பு இன்று (27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான 'யுக்திய சுற்றிவளைப்பு' நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்கும் வகையில் பொலிஸ் சட்டப் பிரிவின் ஊடாக பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினரை கைது செய்வதற்கான குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 3 நாட்களுக்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை
கடந்த 25ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர் 'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |