யாழில் வாக்குரிமை விழிப்பூட்டல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரச அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa), தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயாக்க (Saman Sri Ratnayake), தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் (Herath), தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹமட் (Mohamed), பத்திரண, திவாரட்ண, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் (K.Makesan), யாழ். மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் (Amalraj) ஆகியோர் கலந்துகொண்டர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இங்கே தெரிவிக்கப்பட்டதுடன், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கருத்துக்களும் கேட்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்,
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
மாகாண சபைகளுக்கான செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. அது அதிகாரிகளினால் நிர்வகிக்கப்படுகின்றது.
அங்கு ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமே இல்லை.
ஆனால் அவர்கள் இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு.
பழைய முறையிலோ புதிய முறையிலோ தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்த வேண்டும்.
அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியும்.
நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் 40 யோசனைகளை முன் வைத்துள்ளோம்.
அவற்றில் சிறைச்சாலைகளில் விசேட வாக்களிப்பு முறை, அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு முற்கூட்டிய வாக்களிப்பு முறை, செயற்படாத மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்தல், உள்ளூராட்சி மன்ற காலப்பகுதியை நீடிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்களுக்கு வீடுகளில் வைத்தே வாக்குகளை செலுத்தும் ஏற்பாடு, இளைஞர்களுக்கு கட்டாய கோட்டா முறை, தேர்தல் பிரச்சார செலவீன ஒதுக்கீடு தொடர்பில் கட்டுப்பாடு, வேட்புமனுவில் ஏற்படும் நுட்பத்தவறுகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமளித்தல், தேர்தல் பிணக்குகளை தீர்க்க தேர்தல் நியாய சபையை உருவாக்குதல் போன்ற காணப்படுகின்றன.
பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக தங்களது யோசனைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




