மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி பிணக்குகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது (15.05.2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள்
இதன் போது மயிலத்தமடு, மாதவனை மற்றும் எல்லையோர காணிப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு மகாவலி அதிகார சபையினரினால் மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாகவும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் இணைந்து மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை சமூகமாக தீர்த்து வைப்பதுடன், அப்பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணிகளை பகிர்த்தளிக்குமாறு இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் இதன் போது பணிப்புரை விடுத்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந், நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன்,வன ஜீவராசிகள் திணைக்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





