சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அவரது தனிப்பட்ட பணியாளர்களான இரு சாரதிகளும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் அலுவல் பணி
நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் ஊழல் ஒழிப்புச் சட்டம் எண் 09-இன் கீழ் சபாநாயகருக்கு எதிராக இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான NC 4923 இலக்க வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சபாநாயகரின் அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், காப்பீட்டுப் பணத்துடன் சேர்த்து அந்த வாகனத்தைப் பழுதுபார்ப்பதற்காக நாடாளுமன்றத்தின் பணமும் செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் அதிகாரிகளிடமும் விசாரணை
இது தொடர்பாக, நாடாளுமன்றப் போக்குவரத்துப் பிரிவின் பல உயர் அதிகாரிகளிடமும் இலஞ்ச ஆணைக்குழு சமீபத்தில் விசாரணை நடத்தியுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தில் 50 குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்த நிலையில், குற்றச்சாட்டுகளில் ஒன்று, இரண்டு உத்தியோகப்பூர்வ வாகனங்களுடன் கூடுதலாக மற்றொரு வாகனமும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை என்பதாகும்.
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல் - உயர் எச்சரிக்கை நிலையில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை