வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் அக்வான் புயல் - உயர் எச்சரிக்கை நிலையில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17) மேலும் வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை (17) விடுத்துள்ள வானிலை அறிவிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்கிலும், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'அக்வான்' புயல், நேற்று (16) மாலை சுமார் 5.30 மணியளவில், 12.2° வட அட்சரேகை மற்றும் 85.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (17) மாலை சுமார் 5.30 மணியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் கடுமையான புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
அதன் பின்னர், இப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19 ஆம் திகதி மு.ப 05.30 மணியளவில் மிகக் கடுமையான புயலாக மேலும் வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 20 ஆம் திகதி பகல் 11.30 மணியளவில், மிகப் பலத்த புயலாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானாம் கடற்கரைப் பகுதியில் நெல்லூர் மற்றும் துனி இடையே இந்தியக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
உயர் எச்சரிக்கை நிலை
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தற்போது திருகோணமலையிலிருந்து சுமார் 630 கி.மீ வடகிழக்கிலும், சென்னையிலிருந்து சுமார் 610 கி.மீ கிழக்கிலும், மச்சிலிப்பட்டணத்திலிருந்து சுமார் 660 கி.மீ தென்கிழக்கிலும், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் அமைப்பு நாளை (17) மாலைக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் கடுமையான புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் துனிக்கும், ஏனாம் கடற்கரைக்கும் இடையே நவம்பர் 20 ஆம் திகதி நண்பகலில் இந்தப் புயல் மிகக் கடுமையான புயலாக நாட்டின் நிலப்பரப்பிற்குள் நுழைய வாய்ப்புள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கு காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்படக்கூடிய மோசமான வானிலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களும், குறிப்பாக தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களும் உயர் எச்சரிக்கை (எச்சரிக்கை நிலை) நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்