ஆளும் கட்சியில் உள்ள சிலர் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தடையேற்படுத்துகின்றனர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீது நம்பிக்கையின்றி அவரது வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் தடையை ஏற்படுத்தும் சிலர் அரசாங்கத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்தால், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தளை - நாவுல பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஜனாதிபதியை 5 ஆண்டுகளுக்காக தெரிவு செய்துள்ளோம். அவரது வேலைத்திட்டங்கள் குறித்து எமக்கு பொறுப்புடன் கூறியுள்ளார். அவர் மீது எமக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. எதிர்பார்ப்புள்ளது.
அவரது காலை பிடித்து இழுக்காது அவருக்கு பணியாற்ற சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பணியை ஒரு தரப்பினரால் செய்ய முடியாது.
தற்போது நாட்டில் உள்ள எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சியின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. எதிர்க்கட்சியின் பணியை ஆளும் கட்சியில் இருக்கும் சில் செய்ய முயற்சிப்பது பொருத்தமற்றது.
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு 100 வீதம் ஆதரவை வழங்குவோம்.
அவருக்கு வழங்க வேண்டிய ஆதவை வழங்குவோம் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.