முத்துநகர் விவசாயிகளுக்கு பிரதமர் வழங்கியுள்ள உறுதி
பத்து நாட்களுக்குள் தீர்வினை தருவதாக பிரதமர் விவசாயிகளுக்கு உறுதியளித்ததாக முத்துநகர் விவசாய சங்க செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக நேற்று தொடர்ந்த ஒன்பதாவது சத்தியக்கிரக போராட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், திருகோணமலை கச்சேரிக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டம்
எட்டாவது நாளில் கவனயீர்ப்பில் திருகோணமலையில் ஒரு பகுதியினரும், 120இற்கு மேற்பட்டோர்கள் கொழும்பு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த காலத்தில் இரு முறை ஜனாதிபதி செயலகம் முன்பாகவும், ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுத்திருந்தோம்.
ஜனாதிபதி செயலகத்தில் இரு செயலாளர்களை சந்தித்த போது அவர்கள் கூறியதாவது, ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குள் உங்களுக்கு நல்லதொரு தீர்வை தருவோம் என்று.
அதன்படி காத்திருந்து எங்களுக்கு இதுவரை எந்த பதில்களும் கிடைக்கவில்லை. இனிமேல் நாங்கள் திருகோணமலை கச்சேரியில் கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது சாதகமான பதில்கள் எட்டாமையால் தான் நாங்கள் கொழும்பு சென்றோம்.
மாலை 5.30 மணியளவில் அங்கு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் எங்களுடன் பேசினார்கள். பிரதமர் நாடாளுமன்றில் இருப்பதாக தெரிவித்தனர். பிரதமரின் செயலாளரை சந்தித்து பேசினோம். ஆனாலும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக இரவு 9.30 மணி வரை காத்திருந்தோம்.
மூவருக்கு அனுமதி
அரை மணித்தியாலயம் பொறுத்திருங்கள் என அதிகாரிகள் கூறினர். மேலும் மூவருக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது அதில் நானும் சென்றேன். பிரதமரை சந்தித்து விவசாயிகளான எங்கள் முத்து நகர் நிலம் சூரையாடப்பட்டமை தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தோம்.
விவசாயிகளுக்கு 800 ஏக்கர் நிலமும் குளத்துடன் திருப்பி வழங்கப்பட வேண்டும் எனவும் இதனோடு ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. மூன்று கம்பனிகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக இருந்த போதிலும் மீதமுள்ள பகுதிகளை விவசாயம் செய்ய விடுவித்து தருமாறும் கோரிக்கையினை முன்வைத்தோம்.
ஜூலை 23இல் மாவட்ட செயலகம் முன் இடம்பெற்ற போராட்டத்தின் போது வெளிவிவகார பிரதியமைச்சர் 10 வீத நிலத்தை வழங்கியுள்ளதாகவும், எஞ்சிய நிலத்தை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளமை தொடர்பில் கூறியிருந்தார்.
ஆனால் இன்று விவசாயிகளின் நிலம் 200 ஏக்கருக்கு மேல் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டு முத்துநகர் குளம், தகரவெட்டுவான் குளம் மூடப்பட்டுள்ளது. பின் பகுதி இயந்திரத்தை கொண்டு இடித்து அழித்து வருகின்றனர். அங்கு செல்ல முடியாது எனவும் கூறினோம்.
பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள்
உப்புவெளி கமநல சேவைகள் அதிகாரிகளுடனான கூட்டத்தில் மூன்று சம்மேளனங்களில் உள்ளவர்கள் 800 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாது. பெரும்போக நஷ்டஈடு தரப்படும் என கூறினார்கள். இதனை பிரதமரிடம் ஒட்டு மொத்தமாக எடுத்துரைத்தோம்.
பத்து நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும் என கூறினோம், இவ் வாக்குறியை ஏற்ற பிரதமர் தீர்வை உரிய அதிகாரிகளுடன் பேசி பெற்று தருவதாக கூறினார்.
இவ் அனைத்துக்கும் முடிவாக பிரதமரிடம் மீண்டும் நாங்கள் கூறியதாவது சாதகமான தீர்வொன்றை தராத பட்சத்தில் பிரதமர் அலுவலகம் அல்லது ஜனாதிபதி செயலகம் முன் சத்தியாக் கிரக போராட்டத்தை திருகோணமலையில் இருந்து வந்து தொடர்வோம் தொடர்ந்தும் போராடுவோம் என தெரிவித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



