அரச கட்டிடங்களை ஆக்கிரமிக்க எவருக்கும் அனுமதி இல்லை! கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்: எச்சரிக்கும் பொலிஸார்
அரச கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டிடங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. அவ்வாறு செயற்படுவது சட்டவிரோதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயல்படுபவர்களை பொலிசார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை..
அரச வளங்களையும் கட்டிடங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொலிசாருக்கு உரியது. பொலிசார் தமது பொறுப்பையே நிறைவேற்றி வருகின்றனர்.
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டத்தில் இடமுள்ளது. அதன் அடிப்படையிலேயே சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. இக்காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுக்கும் மோசமான செயற்பாடுகள் பொலிசார் மீது மக்களுக்கு உள்ள பயத்தை இல்லாதொழிக்கும். அவ்வாறான நிலை சிறந்த விளைவுகளை தரப்போவதில்லை.
குற்றச் செயல்களையும் சமூக பிரச்சினைகளையும் சாதாரண மக்கள் முறைப்பாடு செய்வதற்காக இருக்கும் ஒரே இடம் பொலிஸ் நிலையம் தான். அந்த முறைமை சீரழிக்கப்பட்டால் எதிர்காலம் மிக மோசமாகும். ஜனநாயக நாடு என்ற வகையில் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விடயமல்ல. போராட்டங்களை கட்டுப்படுத்தும் போது சந்திக்க நேரும் நேரடி எதிர் விளைவுகளுக்கு முகம் கொடுத்து எந்த நிலையிலும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை பொலிசாருடையது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் நடப்பதே.
பொதுமக்கள் தமது உரிமையை பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதன் போது சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதனை சட்ட வரைவு மூலமாகவே கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும். அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்படலாம். எனினும் பொலிசார் தமது கடமையையே மேற்கொண்டனர்.
காலிமுகத்திடலில் 200க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த போதும் கடந்த மே 9ஆம் திகதி அங்கு சுமார் ஐந்து கூடாரங்களே சேதப்படுத்தப்பட்டிருந்தன. பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் மூன்று அல்லது நான்கு பேருக்கே காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எவ்வாறெனினும் அத்தகைய செயல்களை நாம் அனுமதிக்கப் போவதில்லை.
இறுதி சந்தர்ப்பத்திலாவது பொலிசார் தலையிட்டதனால்தான் மோதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் பெருமளவானோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பெருமளவு கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன.
உண்மையில் நடந்ததும் அவை பிரசாரப்படுத்தப்பட்டமைக்குமிடையில் உள்ள வித்தியாசத்தை இதன் மூலம் காணமுடிகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவரிடம் கொண்டு செல்லப்படுவர். மருத்துவர் அவரை பரிசோதனை செய்த அறிக்கையை வழங்கியதன் பின்பு அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.
பிரசாரப்படுத்தப்படுவது போல் ஜனாதிபதி செயலகத்தை மீட்கும் போது பாரதூரமான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் பெரும்பாலானோர் காயமடைந்திருக்க வேண்டும். மற்றும் அந்த சம்பவங்கள் தொடர்பில் ஆறு முறைப்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன.
சிறு காயங்களே தவிர பாரிய காயங்கள் தொடர்பில் அதில் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறுதான் சிறு சம்பவமொன்று பூதாகரமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.