சூரிய மின்கல படலம் நிறுவுதல் மற்றும் பாரமரித்தல் தொடர்பான பயிற்சி
சூரிய மின்கல படலம் (solar Panel) நிறுவுதல் மற்றும் பாரமரித்தல் தொடர்பான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி நெறியானது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இன்று (24.10.2024) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பயிற்சி நெறிக்கு புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணை அனுசரணை வழங்கியுள்ளது. எங்களுடைய நாடானது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கின்றது.
நீண்டதொரு சேவை
அந்தவகையில், எங்களுடைய நாட்டில் தொழிற்பயிற்சிகள் குறுகிய காலப்பகுதியில் வளர வேண்டியுள்ளது.
அந்த அடிப்படையிலே தொழில் முயற்சிகளை இனங்காணுதல் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சியினை வழங்குகின்ற பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்கள் குறுகிய காலப்பகுதிக்குள்ளே முயற்சி செய்து வழிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இதன்போது கூறினார்.
மேலும், தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இது தொடர்பாக தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் ஊடாக இந்த துறையிலேயே நீண்டதொரு சேவையை செய்யக்கூடிய வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி இருப்பதனால் இதனை சரியான முறையில் கற்றுக்கொண்டு உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
சான்றிதழ்கள்
இப்பயிற்சியில் கலந்து கொண்ட 50 பயிற்சியாளர்களுக்கும் 'NVQ' சான்றிதழ்களுக்கு நிகரான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பேரேரா, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் அருன் பிரதீபன், பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் உதவி பணிப்பாளர் ஜெயசூரியன், இலங்கை நிலைத்து நிற்கும் சக்தி அதிகார சபையின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மதேவ், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் என்.கோவிந்தராஜன், திருகோணமலை மாவட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகர் என்.நிஜாஸா என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

