சோசலிசவாதிகள் போல் நாட்டை நான் தாரை வார்க்க மாட்டேன் : சஜித் திட்டவட்டம்
தேசிய வளங்கள் குறித்து வாய் கிழிய பேசும் கம்யூனிஸ, மார்க்சிஸ தீவிர போக்குடையவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு துரோகம் செய்து நாட்டை பணத்திற்காக விற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறானதொன்றுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் (Ampara) நேற்று (11.05.2024) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் மாவட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி
மேலும் தெரிவிக்கையில், “என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்பதை பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணையாளர்களுக்கும், கால்நடை அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபிவிருத்தியை மேற்கொள்ள அதிகாரத்தைக் கோருபவர்கள் மக்களின் நேரடி, மறைமுக வரிப்பணத்தை அபிவிருத்தி என்ற பெயரில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் அரச வருமானம் மட்டும் போதாது. எனவே வெளிநாடுகளில் இருந்து கூடிய ஒத்துழைப்பையும், மானியங்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
சிறிமாவோவின் காலத்தில் நாமல் ஓயா திட்டம் உருவாக்கப்பட்டது. இதனை மேலும் வலுப்படுத்துவதற்காக பண்டாரநாயக்கவின் தரப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், நீர்ப்பாசன நாகரிகம் புதிய யுகத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும். இரு போகங்களிலும் பயிரிடக்கூடிய வகையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |