அரசாங்கத்தின் சிலா், ஜனாதிபதி, பிரதமர் ஆடைகளை அணிய விரும்புகின்றனர் : பொதுஜன பெரமுன
இலங்கையில் மின்சார நிலையம் ஒன்றை அமைக்க 225 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்ற நிலையில் யுகதனவி மின்சார நிலையத்தில் 40வீதப் பங்குக்காக 250 மில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனமான நியூ போற்றீஸ் முதலீடு செய்துள்ளது.
எனவே இது நாட்டு மக்களுக்கு பயன் தரக்கூடிய செயற்பாடாகவே உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்போது நாட்டு மக்களின் மின்சாரக்கட்டணத்தை 100க்கு 25 வீதமாக குறைக்கமுடியும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அதிக முதலீட்டை இலங்கைக்கு வரவழைக்கமுடியும் என்றும் அவர் தொிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு சிலா் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆடைகளை அணிய விரும்புகின்றனர் என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இவர்கள் இரவில் சாதாரண சாரங்களை அணியாமல் தேசிய ஆடைகளை அணிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சு நோய் ஏற்படுவது இயல்பு. அதேபோன்று அமைச்சராக இருப்பவர் ஒருவருக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் நோய் ஏற்படுவதுண்டு.
இதன்போது சிலர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆடைகளை அணிய ஆசைப்படுகின்றனர். சிலர் அந்த ஆடைகள் அணிவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான பலர் இன்று வீடுகளிலும் சிறைகளிலும் இருப்பதாக ரோஹித்த அபேகுணவர்த்தன தொிவித்துள்ளார்.