மித்தெனிய விவகாரம் தொடர்பில் சந்தேக நபர் கைது! அரசியல் பழிவாங்கல் என முறைப்பாடு
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் சேனாதீரவின் சமீபத்திய கைது தொடர்பாக அவரது சகோதரியால் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய, தலாவ மற்றும் காரியமடித்த பகுதிகளில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சேனாதீர கடந்த வியாழக்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.
அரசியல் பழிவாங்கல்
முறைபாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்த சேனாதீரவின் சகோதரி, கைது செய்யப்பட்டபோது பொலிஸாரும் சிறப்புப் படையினரும் (STF) தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும், இந்த சம்பவம் அரசியல் பழிவாங்கலுக்குச் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டபோது, அதிகாரிகள் குடும்ப உறுப்பினர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தனது குழந்தைகளுக்கு கடுமையான மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அவர்கள் இப்போது உணர்ச்சி ரீதியாக பின்தங்கியுள்ளதாகவும், பள்ளிக்குச் செல்ல மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முறைப்பாடு
அவரது கூற்றுப்படி, சேனாதீர எம்பிலிப்பிட்டிய பொலிஸ்நிலையத்திலிருந்து எந்த விளக்கமும் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு தற்போது மித்தேனிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனது சகோதரர்கள் இருவரும் இலங்கை பொதுஜன பெரமுனவுடன் (SLPP) தொடர்புடையவர்கள் என்றும், அவர்களின் கைது அரசியல் நோக்கம் கொண்டது என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.