கெஹெல்பத்தரவின் பயங்கரமான செயற்பாடுகள் - தொடர் விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்கள்
குற்ற கும்பல்களின் தலைவர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களால், நுவரெலியாவில் இரகசிய இடத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் இந்த ஐஸ் போதைப் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் பத்மே உள்ளிட்ட குழுவால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஸ் போதைப்பொருட்களை போன்று தரம் வாய்ந்தவை அல்ல என்பதையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தயாரிப்பு
பல சந்தர்ப்பங்களில் நாட்டில் ஐஸ் போதைப்பொருட்களை அவர்கள் தயாரித்திருந்தாலும், அவற்றை சரியான தரத்திற்கு கொண்டு வர முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேலியகொட குற்றப்பிரிவு அதிகாரிகளால் மித்தெனிய தலாவ பகுதியிலும் தங்காலை பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் இரசாயனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இந்த இரசாயனப் பொருட்கள் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் பியால் மனம்பேரி ஆகியோரால் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இரசாயனப் பொருட்கள்
நேற்று தங்காலையில் கைவிடப்பட்ட காணியில் மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்டதைப் போன்ற மற்றொரு இரசாயன தொகையை பொலிஸார் கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஈரானில் இருந்து 2 கொள்கலன்களில் இந்த இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கெஹெல்பத்தர பத்மே இந்த இரண்டு கொள்கலன்களையும் அனுப்பிய நிலையில் அவருக்கு பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க உதவியுள்ளார் என தெரியவந்துள்ளது.



