நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதியின் கருத்துக்கு மொட்டுக் கட்சி போர்க்கொடி
நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பது, விசாரணையின் சுயாதீனத்தன்மையைப் பாதிக்கும் ஒரு முறையற்ற செயல் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முற்றிலும் தவறான தகவல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் என்ற ரீதியில், ஒரு விசாரணை நிலுவையில் இருக்கும்போது அதன் முடிவு குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது விசாரணையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும்.

நிலக்கரி ஊழல் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என ஜனாதிபதி கூறியது முற்றிலும் தவறான தகவல். பல தரப்பினரால் முறைப்பாடுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன." - என்றார்.
நிலக்கரி விவகாரத்தை கோப் குழுவில் விவாதிக்கலாம் என்ற ஜனாதிபதியின் யோசனைக்குப் பதிலளித்த அவர், "அவ்வாறாயின், எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாகக் கோரி வருவது போல கோப் குழுவின் தலைவர் பதவியை உடனடியாக எதிர்க்கட்சியிடம் ஒப்படையுங்கள்" என்று சவால் விடுத்தார்.
பிரம்மாண்ட அரசியல் பேரணிகள்
அவசர கொள்முதல்களை மேற்கொள்வதற்காகவே அரசால் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்திய அவர், டெண்டர் வழங்கப்படுவதற்கு முன்னரே விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விநியோகஸ்தர்களை நேரில் சந்தித்திருப்பது சாதாரணமான விடயமல்ல என்றும் குறிப்பிட்டார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள கடினமான சமூக - பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டும், மக்களின் கஷ்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், எதிர்வரும் வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த கட்சியின் பிரம்மாண்ட அரசியல் பேரணிகள் அனைத்தையும் தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது அறிவித்தார்.
அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு