சுதந்திர கட்சியின் தலைமை விவகாரம்: கொழும்பு நீதிமன்றின் உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் (Wijeyadasa Rajapakshe) செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எதிராக இடைக்காலதடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதை கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (16.05.2024) வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விஜயதாச ராஜபக்சவிற்கும் கீர்த்தி உடவத்தவைக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
தடை உத்தரவு
இதனை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் (Thuminda Dissanayake) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த எதிர்ப்பு முறைப்பாட்டிற்கு எதிராக கடுவெல மாவட்ட நீதிமன்றத்தினால் கடந்த 13ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மனுவை ஏற்று தடை உத்தரவை பிறப்பிப்பது தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் நேற்று பரிசீலனைகளை மேற்கொண்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவின் முறைப்பாட்டின் நிலைப்பாட்டிற்கு சவாலான வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
கட்சியில் பிளவு
இந்நிலையிலேயே, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலதடை உத்தரவினை மறுத்து கொழும்பு நீதிமன்றினால் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முன்னதாக மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena), ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) தாக்கல் செய்த மனுவினடிப்படையில், அவருக்கு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்தது.
இந்த உத்தரவு, பின்னர், விசாரணை முடியும் வரையில் என்ற அளவில் நீடிக்கப்பட்டதையடுத்து, மைத்திரிபால சிறிசேன, கட்சி தலைமை பதவியை துறந்து அதற்கு பதிலாக விஜயதாச ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்க ஏற்பாடுகளை செய்தார்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை, சந்திரிக்கா தரப்பினர் தெரிவு செய்தனர்.
இதற்கமைய, தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விஜயதாச தரப்பு மற்றும் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தரப்பு என்ற வகையில் இரண்டாக செயற்பட்டு வருகிற நிலையில், விஜயதாச ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |