முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி
புதிய இணைப்பு
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய இருபதுக்கு20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி, இப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி இலக்கு 161 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றதுடன், சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய இருபதுக்கு20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹஸரங்க 32 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட பாசல்ஹக் பாரூக்கி, 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியானது, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு அரங்கில் இன்றையதினம் (17.02.2024) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை 5 ஓவர்கள் முடிவில் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
மோசமான ஆரம்பம்
பதும் நிஷங்க 6 ஓட்டங்களுக்கும் குசல் மென்டிஸ் 10 ஓட்டங்களுக்கும் பாசல்ஹக் பாரூக்கி வீசிய பந்துகளில் சரிந்து களத்திலிருந்து வெளியேறினர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
ஐசிசியின் தரவரிசை
இந்நிலையிலேயே, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மேலும், ஆண்களுக்கான ஐசிசியின் இருபதுக்கு20 தரவரிசையில் இலங்கை 8ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 10ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |