கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கை நீதிமன்றம் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதமாக கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் திகதி மீன்பிடிக்க சென்று நான்காம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைத்தனர்.
குறித்த வழக்கு நேற்று (16) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் 23 கடற்றொழிலாளர்களில் 20 கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து உத்தரவிட்டடார்.
எனினும், இரண்டு மீன்பிடி விசைப்படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத காலம் சிறந்த தண்டனையும், ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், நீதிபதியின் தீர்ப்பு இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச்சிட்டு வழங்கும் அலுவலகம் முன்பு கடற்றொழிலாளர்கள் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |