நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்க திட்டம் - இலங்கை போக்குவரத்து சபை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் நடத்துனர்கள் இன்றி இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையானது எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகள் இயங்கத் தொடங்கும் முன் பயணசீட்டுக்கள் வழங்கப்படும் என்றும், அந்த பயணசீட்டுகளை பேருந்து சாரதியிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகளை சேவையில்
மேலும், கொழும்பில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டண அதிகரிப்புக்கு தீர்வாக மின்சார வாகனங்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
எதிர்காலத்தில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், தொடருந்துகள் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மின்சாரமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், மின்சார முச்சக்கரவண்டிகள் இந்த வருடம் சந்தைக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை
மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருட்களினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையை வியாபாரமாக கருதி தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |