ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் இலங்கை பின்னடைவு
பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் மிக மோசமான பதிவை இலங்கை கொண்டுள்ளதாக வெரிட் ஆய்வின் புதிய அறிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது என்பதை அங்கீகரிக்காத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே என்றும் அந்த ஆய்வு காட்டுகிறது.
எனினும், மருந்து கொள்வனவு போன்ற சில நிகழ்வுகளைத் தவிர இலங்கையில் ஏறக்குறைய அனைத்து பொதுக் கொள்வனவுகளையும் நிர்வகிக்கும் 2006ஆம் ஆண்டின் கொள்முதல் வழிகாட்டுதல்களில் பாரிய இடைவெளிகள் உள்ளன.
உயர் மட்ட ஊழல்கள்
எனவே ஊழலை எதிர்த்து நிதி நிர்வாகத்தை மீட்டெடுக்க இந்த இடைவெளிகளை அவசரமாக சரிசெய்வதன் முக்கியத்துவத்தை ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது.
கடனை கட்ட தவறிய ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பெயர்களை பொது இணையத்தள தரவுத்தளத்தில் வெளியிடவும் இலங்கையில் ஏற்பாடுகள் உள்ளன.
இருப்பினும், அரசத்துறையால் பராமரிக்கப்படும் இந்த தரவுத்தளத்தில் எவ்வித பதிவுகளும் இல்லை. இதற்கு நேர்மாறாக, ஜூலை 2023 நிலவரப்படி, நேபாளத்தின் இணைத்தள தரவுத்தளத்தில் 629 உள்ளீடுகளும், பங்களாதேசில் 510 பதிவுகளும் இருந்ததாக வெரிட் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை கண்டறிதலின் கொள்வனவுகளில் உயர் மட்ட ஊழல்கள் சரிசெய்வதன் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையை, வெரிட் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |