உலகக் கிண்ண தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு: ஐசிசி உறுதி
உலகக் கிண்ண டி20 - 2026 கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை மற்றும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதை ஐசிசி மீண்டும் அறிவித்துள்ளது.
20 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரை உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு டி20 2024 போட்டியானது மேற்கிந்தியத் தீவு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.
2026 உலகக் கிண்ணப் போட்டி
இந்த தொடரில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகள்,போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியாவுடனும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
போட்டியை நடத்தும் நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்படும்.
எஞ்சிய 8 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை பெரும் இந்நிலையில், இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் 20க்கு 20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் 8 சுற்று போட்டிகளின்போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெளியேற்ற சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |