ஜனாதிபதி தேர்தலின் எதிர்பார்ப்புக்களை கொண்டிராத மலையக மக்கள்
இலங்கையின் மலையகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறைவாகவே உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக இலங்கை அரசால் ஓரங்கட்டப்பட்ட குறித்த மக்கள், பொருளாதார நெருக்கடியால் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னரும் உடனடி தீர்வுகளை எதிர்பார்க்கவில்லை என குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம் எதிர்பார்ப்பதற்கு எதுவும் இல்லையென்று தெரிவித்த மலையக தோட்டத்தொழிலாளி ஒருவரை கோடிட்டு இந்திய ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மின் பராமரிப்புப் பணி
இதன் காரணமாக தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு மின் பராமரிப்புப் பணிக்காக இந்த மாத இறுதியில் குறித்த மலையக தோட்டத்தொழிலாளி துபாய்க்கு செல்லவுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் மலையக மக்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, சுமார் 200 வருடங்களாகவுள்ளன.
இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை இன்றும் அதே நிலைமையில் இருந்து வருகிறது.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர், 1867ம் ஆண்டு கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் எல்லை பகுதியான லூல்கந்துர தோட்டத்தில் முதலாவது தேயிலை செய்கையை ஆரம்பித்தார்.
தேயிலை செய்கை
தேயிலை செய்கைக்கு முன்னதாக கோப்பி உள்ளிட்ட செய்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. கோப்பி உள்ளிட்ட செய்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே, தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு மலையக மக்கள் 1822ம் ஆண்டு மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வரிசையாக அமைக்கப்பட்ட சிறிய அறைகளை கொண்ட லயன் அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு 1822ம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்ட லயின் அறைகளில் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற நிலைமைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
சுமார் 100 வருடங்கள், 150 வருடங்கள், 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட லயின் அறைகள் இன்றும் காணப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |