பதவி விலகியமை தொடர்பில் வெளியான தகவலை மறுத்துள்ள பாலித ரங்கே பண்டார
புதிய இணைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தனது பதவி விலகியதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
“இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அப்படியொரு செய்தி எனக்கு தெரியாது," எனவும் அவர் மறுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி சஜித் பிரேமதாசவோடு இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளரை எந்த நேரத்திலும் நியமிக்கவும் நீக்கவும் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அவர் கடமைகளுக்காக வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனையவர்களிடம் தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (28) ஏற்பாடு செய்துள்ளார்.
பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர், சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, ஆகியோரை ‘சிறிகொத்த’ கட்சியின் தலைமையகத்தில் தங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில காலங்களாக ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாலித ரங்கே பண்டாரவிற்கும் இடையில் முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும், கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும், தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டமும், உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும், தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும் வடக்கு மாகாணமும், பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல பகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரசாரம்
கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஸாந்த டியுடர், தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டததரணி டொனால்ட் பெரேரா ஆகியோர் கட்சித் தலைமையகத்திலிருந்து மாவட்ட இணைப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.