ஆசிய கிண்ண வெற்றியின் இரகசியத்தை கூறிய தசுன் ஷானக்க
ஒரு அணியின் தலைவராக, மற்றைய வீரர்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த விடயம் தன்னம்பிக்கை தான் என இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றியின் இரகசியம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை அணியில் அனைவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால் அணியை நிர்வகிப்பது இலகுவாக உள்ளது. அணியில் ஒரு பெயருக்காக யாரும் தனித்தனியாக இருக்க முயற்சிக்கவில்லை.
ஹசரங்கா, சாமிகா, பானுக ஐபிஎல்லில் விளையாடியுள்ளனர், மற்ற அனைத்து லீக்களிலும் விளையாடுகிறார்கள். எனினும் நான்தான் எல்லாம் என்ற இடத்தில் இருந்தது இல்லை.
இது ஒரு பெரிய உதவி என்று நினைக்கிறேன், வனிந்து ஒரு இளைஞனிடம் சென்று சில அறிவுரைகளை வழங்கும்போது, அவர் அதை அடிக்கடி பயன்படுத்துகிறார், அவரும் மற்ற வீரர்கள் என்ன கொடுக்கிறார்கள் என்று கேட்டு அந்த நேரத்தில் என்ன செய்வது சரியானது என்று முடிவு செய்கிறார், அதனால்தான் நான் அணியை வழிநடத்துவது எளிதானது என்று நான் நினைக்கிறேன்.
தலைவராக வீரர்களுக்கு என்னால் வழங்கக்கூடியது தன்னம்பிக்கை. எனது திறமைக்கு ஏற்ப வீரர்களுக்கு அதனை வழங்குவேன் என நினைக்கிறேன். வீரர்கள் தவறிழைத்ததற்காக நான் ஒருபோதும் வருத்தமடைய மாட்டேன்.
உணர்ச்சிகள் கிரிக்கெட்டில் முக்கியமானவை. அந்த உணர்வுகளை சரியாக நிர்வகித்தால் அணியை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.”என கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி
15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதி கொண்டன.
இறுதியாட்டத்தில் 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று 6-வது முறையாக இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
ஆசிய கிண்ண போட்டிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு கொழும்பில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.