ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பை மறுத்த ஐக்கிய தேசியக் கட்சி
இந்தமுறை மே தினத்தைக் கொண்டாடுவதற்குத் தங்களது கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள மறுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தமுறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கை
மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமானது அல்ல என்று ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த காலத்திலேயே சுட்டிக்காட்டியிருந்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் அல்லது வேறு எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்படுவது பலரினதும் எதிர்பார்ப்பாகும் என்பதால், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.