எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு! கபில சந்திரசேனவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இதேவேளை, ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.