நாமல் ராஜபக்சவின் தொடர்ச்சியான விளக்கமறியல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரல் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், 1997ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிணைச் சட்டத்தின்படி, பிணை வழங்குவதே பொதுவான விதியாகவும், பிணை மறுப்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச தனது அரசியல் அணியைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும், சட்டத்தரணி என்ற அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சி
நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதாகத் தெரிவித்த அவர், நீதிமன்றத் தீர்ப்புகளில் நாடாளுமன்றம் தலையிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனிநபர் சுதந்திரம் மற்றும் பிணைச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்குமான நீதியின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.