தமிழ் பொது வேட்பாளரை கண்டு திகிலடையும் சிங்களத் தலைவர்கள்
தமிழ் மக்கள் ஐக்கியப்படும் போதெல்லாம் சிங்களதேச அரசியல் பரபரப்படைய தொடங்கிவிடும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி முடிவு செய்திருக்கிறது.
தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுத்தொடங்கிய நிலையில் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அச்சமடைய தொடங்கி விட்டனர்.
அதனால்தான் மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழர்களின் நிலைப்பாடு சிங்கள தேசத்தை மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுடைய வகிபாகம் என்ன என்பதையும், தமிழ் மக்களும், தமிழ் தலைவர்களும் உணர வேண்டும்.
சிவில் சமூகத்தினரின் தீர்மானங்கள்
முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களை ஒரு மையத்தில் குவித்து தமிழ் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு மார்க்கமாக 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் "எதிர்வரும் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை மீண்டும் சர்வதேச உலகத்துக்கு சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்." என தனது ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார்.
அதுவே கொள்கை ரீதியாக தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும், தமிழ் மக்கள் தமது இறைமையை வாக்குகளின் மூலம் ஒரு தமிழ் தலைமைக்கு வழங்குவதற்குமான வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் கோரிக்கைதான் கடந்த 2015 தேர்தலிலும் 2019 தேர்தலிலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. அதனை பலதரப்பட்ட அரசியல் ஆய்வாளர்களும் கோடிட்டு பல கட்டுரைகளை எழுதியும் ஊடகங்களில் பேசியும் வந்துள்ளனர்.
அந்தப் பின்னணியிற்தான் தற்போது 2024ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகள் கழிந்தநிலையில் பலமடைந்து பரவலடைந்துள்ளது.
இந்த பின்னணியிற்தான் தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதும், சிந்திப்பதும், செயற்படுத்துவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியா வாடி வீடு விடுதியில் ஒன்று கூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வருமாறு தீர்மானங்களை மேற்கொண்டனர்.
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறையாண்மையையும், சுயநிர்ணைய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.
2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.
3. அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.
4. அதற்காக சிவில் சமூகமும், தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.
5. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை நோக்காகக் கொண்டு செயல்படுவது.
சர்ச்சைக்குரிய கருத்து
இவ்வாறு சிவில் சமூகத்தினரின் நடவடிக்கையை அடுத்து சிங்களத் தலைவர்கள் அச்சமடைய தொடங்கி விட்டனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நாளில் தமிழர்களுக்கு நன்கு பரீட்சியமான மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று முக்கிய சிவில் சமூகப் பிரதி ஒருவரை சந்தித்து "பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுத்து விடாதீர்கள்" எனக் குறிப்பிட்டார்.
“தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தத்தான் போகிறார்கள்” என அந்த சிவில் சமூகப் பிரதி குறிப்பிட்ட போது "அப்படியாயின் தமிழ் மக்கள் தமது இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்கினை ரணிலுக்கு அளிக்கும்படி சொல்லுங்கள்" அன்றும் கேட்டுள்ளார்.
மேற்படி விடயம் ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத் தீவைப் பொறுத்தளவில் ஒரு சிறிய தேசிய இனமாக இருக்கலாம், ஆனால் இலங்கை தீவிலும், இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரசியலிலும், மேற்குலகத்தின் உலகம் தழுவிய அரசியலுக்கும் (பூகோள அரசியல்) ஒரு இன்றியமையாத வகிபாகத்தை வகிக்கிறார்கள் என்பது புலனாகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது பற்றி தென்னிலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருடன் பேசும்போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க “தமிழர்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தட்டும். அதைப் பற்றி எனக்கு எந்த கவலை இல்லை” என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் இப்போது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்கின்ற தீர்மானம் உறுதியாகி வரும் நிலையில் அவர் அச்சமடைந்துள்ளார். தமிழர்கள் உதிரிகளாக இருக்கின்ற போது ஏறி மிதித்தவர்கள், எக்காளமிட்டவர்கள், பொருட்டாக மதிக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் திரட்சி பெறுகின்றபோது அச்சமடைகின்றனர்.
அதன் வெளிப்பாடுதான் ரணில் விக்ரமசிங்காவினால் ஐரோப்பிய ராஜதந்திரி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை.
ஆனாலும் கொழும்பில் வாழ்ந்து கொண்டு கொழும்புமைய அரசியலை மேற்கொள்ளும் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதை ஏளனம் செய்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் எனத் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பது என்பது குறித்த ஒருவரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையே கொடுக்கும்.
"யார் அந்த கோமாளி பொது வேட்பாளர்" என சர்ச்சைக்குரிய கொழும்பு வாழ் யாழ். மாவட்ட அப்புக்காத்து எம் பி. ஒருவரின் கையாள் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தி என்ற போது அல்லது தமிழ் மக்கள் திரட்சியாக தேசியம் பேசுகின்ற போது சிங்களவர்கள் கோபப்படுகிறார்கள் இது சிங்களர்களை ஆத்திரமூட்டும் செயல் என்கிறார் சுமந்திரன்.
அப்படியானால் இதுவரை காலமும் சிங்கள மக்கள் அல்லது சிங்கள தலைவர்கள் தமிழர்கள் மீது ஆத்திரம் கொள்ளவில்லையா? என்ற ஒரு பலமான கேள்வி எழுகிறது.
தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் என்ன? ஒன்று திரளாவிட்டால் என்ன? தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்டால் சிங்கள தேசத்தில் கோப அக்கினி வெளிப்படும்.
இது சிங்கள தேசத்தின் அரசியல் பண்பாட்டியல். சிங்கள மக்கள் பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசினால் மறுகணமே கழுத்தை நெரிப்பார்கள்.
இதுவே யதார்த்தம். எந்த உயிரியும் போராடித்தான் வாழ வேண்டும். போராடாமல் எந்த உயிரிக்கும் வாழ்வு கிடையாது.
ஆகவே எமது உரிமைகளை கேட்பதற்கு சிங்கள தேசம் கோவப்படுகிறது என்றால் நாம் வாய் பொத்தி மௌனியாக, அடிமைகளாக, சேவகம் செய்யத்தான் முடியும். சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டுமாக இருந்தால் போராடித்தான் ஆக வேண்டும். இதுவே யதார்த்தம்.
இதனை கொழும்பிலே வாழ்ந்து, அடிமைத்தன, கீழ்ப்படிவு சமூகவியலுக்குள் பழக்கப்பட்டு அடிமைத்தனமாக வாழ்கின்ற வாழ்க்கை முறையே சகஜமானதாக எண்ணி வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு அதுவே மேலானதாகவும் சொர்க்க வாழ்வாகவும் தோன்றும்.
இத்தகைய உளவியல் அடிமை மாயைக்குள் இருந்து கொழும்பு வாழ் தமிழரசியல் தலைமைகள் எனப்படுவோர் விடுதலை பெறவேண்டும்.
இல்லையேல் இவ்வாறுதான் அடிமை வாழ்வுதான் சுதந்திரம் என்றும், ஜனநாயகம் என்றும், இதுவே வாழ்க்கை என்றும் தவறாக எண்ணிக் கொண்டிருப்பர்.
எனவே தாயக மண்ணில் வாழ்பவனே தமிழர்களை வழிநடத்த வேண்டும் அத்தகைய தலைவனுக்கே தமிழ் மக்களின் தேசிய அபிலாசை என்னவென்று புரியும்.
அதே நேரத்தில் சம்பந்தர் பொது வேட்பாளரை நிறுத்துவதனால் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் முன்நிற்கின்ற இரண்டு பிசாசுகளில் சிறிய பிசாசுக்கு வாக்களிப்போம்"" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர்
தமிழ்மக்களின் அரச அறிவியலில் முதிர்ச்சிக்கு இது எத்தகைய அவமானகரமான கூற்று. 2010 தேர்தலில் பெரிய பிசாசைவிட சின்னப்பிசாசுக்கு ஆதரவளிப்போம் என்றுதானே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை நேரடியாக நின்று படுகொலை செய்த இராணுவ தளபதி சரத் பொன்சாய்க்காவுக்கு வாக்களிக்க சொன்னீர்!.
அவ்வாறு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் பெரிய பிசாசைவிட குட்டிப் பிசாசாகிய சிறிசேனாவுக்கு வாக்களிக்க சொன்னீர்!. 2019 தேர்தலில் பெரிய பிசாசுவை விடுத்து சின்ன பிசாசுவாகிய சஜித்துக்கு வாக்களிக்க சொன்னீர்!.
இத்தகைய அரசியலால் தமிழ் மக்களுக்கு ஒரு உப்பு கல்லை தானும் பெற்றுத்தர முடிந்ததா? அல்லது தமிழ் மக்கள் சர்வதேசரீதியாக ஒரு அரசியல் முன்னெடுப்பை இதனால் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதா? இரண்டுமே ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் மேன்மேலும் அழிந்து முள்ளிவாய்க்கால் பேராவலத்தை ஒத்த ஒரு அரசியல் பேரவலத்தையே இந்த முடிவுகள் ஏற்படுத்தின என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிங்கள தேசத்தின் பெரிய பிசாசு, சின்னபிசாசு, குட்டிப்பிசாசு, தெரிந்தபேய், தெரியாதபேய் எல்லாம் ஒன்றுதான். அனைத்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே முனையும்.
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதையே இவை இலட்சியமாக வரித்துக் கொண்டவை. இவற்றில் நல்லவை, கெட்டவை என்று பாகுபாடு செய்வதற்கு இடம் கிடையாது.
இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு பொது எதிரிகளே. கொழும்புவாழ் தமிழ் அரசியல் தலைமைகளின் இத்தகைய சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கும் தம்நலன் சார்ந்த சுயநல அரசியல் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இதனை அடுத்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆயுதக் குழுவின் தலைவரின் அரசியல் ஆலோசகர் "இந்த சிவில் சமூகத்தினர் எதனையும் கதைப்பார்கள் செயல்படுத்த தூண்டுவார்கள் ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் இவர்கள் எதற்கும் வரமாட்டார்கள்.
தேர்தலில் நிற்பதற்கும் மக்களுடைய கேள்விக்கும் நாங்கள்தானே பதிலளிக்க வேண்டும். ஆகவே இந்த சிக்கலில் நாங்கள் மாட்டாமல் ரணிலுக்கு வாக்களிப்போம்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் இவர்கள் மேடைகளில் பொது வேட்பாளர் வேண்டும் அது நல்லதுதான் என குறிப்பிடுகின்றனர்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது மக்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்கள்? எப்போது மக்களை சந்தித்து இருக்கிறார்கள்? பொதுத்தேர்தல் வரும் போது மட்டுமே இவர்கள் மக்களிடம் வாக்குப் பிச்சை பெறுவதற்கு மட்டுமே வருகிறார்கள்.
வாக்குகளால் கதிரையை பெற்றுவிட்டால் அவர்கள் மக்களை மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் சுகபோகத்தையும் அதனால் கிடைக்கக்கூடிய தமக்கான சலுகைகளையும் தேடியே பெரும்பாலான காலத்தை செலவழிக்கிறார்கள் என்பதுவே நிதர்சனம்.
எனவே சிவில் சமூகத்தினர் முன்னெடுக்கின்ற பொதுவேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பரவலடைந்து இருக்கிறது. வலுவடைந்து இருக்கிறது.
ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள சிலருக்கு உள்ளுக்குள் கோபத்தை விளைவித்தாலும் அவர்கள் வெளியே காட்டாமல் நடிப்பதாகவே தோன்றுகிறது.
எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுடைய விருப்பினை இவர்கள் நிறைவேற்றித்தான் தீர வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தல் இவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டும்.
தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்காமல் இருக்கின்ற சிவஞானம் சிறீதரன் "தனிப்பட்ட ரீதியாக நான் பொது வேட்பாளர் நிறுத்துவதை ஆதரிக்கிறேன்" என்று கருத்தை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல பொது வேட்பாளர் விடயத்தை மத்திய குழு கூட்டத்தில் எடுக்கின்ற தீர்மானத்திற்கு அமைய கட்சியின் தீர்மானத்திற்கே நான் கட்டுப்பட்டவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் அவருடைய விருப்பம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதுதான். ஆகவே, தமிழரசு கட்சியின் பெரும்பான்மையானவர்கள் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்று கொள்ளப்பட முடியும்.
அதே நேரத்தில் யாழ். மாவட்ட எம். பி. ஆகிய முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையானவர்களும் பொது வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளனர்.
மேற்படி சிவில் சமூகத்தினர் மேற்கொண்ட ஊடக அறிவிப்பிற்கும் அவர்கள் முழுமையானஆதரவு வழங்கி இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் பரப்பில் பெரும்பான்மையானோர் மத்தியில் பொது வேட்பாளர் என்பது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு கடந்த நாட்களில் தமிழ் ஊடக பரப்பில் அச்சு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சாதகமான எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
எனவே ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற விடயம் முக்கியமானது என்ற கருத்து வலுவடைந்துவிட்டது. ஈழத்து அரசியலில் எப்போதும் தமிழ்மக்கள் கொள்கையின் பக்கமே நின்று இருக்கிறார்கள். கொள்கைக்காகவே வாக்களித்து இருக்கிறார்கள்.
எனவே தமிழ் சிவில் சமூகம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமிடத்து பெரும்பான்மை தமிழ் மக்கள் அந்தப் பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர் என்பது திண்ணம்.
இவ்வாறு சிவில் சமூகம் முன்னின்று ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதாக வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை நிராகரித்து தமிழ் மக்களின் ஆணை பெறுவதற்கான தேர்தலாக இதனைப் பயன்படுத்தி தமிழ் வாக்குகளை ஒன்று குவித்து ஜனநாயகத்தின் பெயரால் ஒரு மக்கள் ஆணையை பெற்றுவிட்டால் அது சர்வதேச அங்கீகாரத்துக்கு உட்பட்டதாகவே அமையும்.
இதன் மூலம் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்தும் செய்தியை அறிவிக்க முடியும்.கூடவே சிதைவடைந்துள்ள தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை தூக்கி நிறுத்தவும் முடியும்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது முடிவாகிவிட்டது. அடுத்து யாரை? நிறுத்துவது என்பதுவே இங்கே கேள்வியாக உள்ளது.
இது இலகுவாக தீர்க்கப்படக் கூடிய ஒன்றே. தமிழர் தரப்பில் மிகச் சிறந்த ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரிகள், மிகச்சிறந்த அறிவார்ந்த ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற ஆளுமை மிக்க கல்லூரி அதிபர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், ஓய்வு பெற்ற பெண் அதிகாரிகளும், பெண் ஆளுமைகளும் இருக்கிறார்கள்.
தேசத்திற்கு தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்த முற்போக்கான அன்னையர்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய சமூக சமயப் பெரியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவர்களில் யாரையாவது ஒருவரை இலகுவாக தெரிவு செய்திட முடியும்.
அதுவும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தமிழ் தேசியம் பெரும் ஆபத்துக்குள்ளாகி இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஒருவரை தெரிவு செய்வதன் மூலம் அனைத்து தமிழ் மக்களுடைய வாக்குகளையும் ஒன்று திரட்டி ஒரு மக்கள் ஆணையை நிச்சயமாக தமிழ் மக்களால் பெறமுடியும்.
அவ்வாறு ஒருவரை நிறுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கான மக்கள் ஆணை ஒன்றை பெறுமாறு ஈழத் தமிழர்களை வரலாறு வற்புறுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |