இரண்டு தசாப்த ஆட்சியில் இருந்து விலகும் சிங்கப்பூர் பிரதமர் லீ
சிங்கப்பூரின் (Singapore) நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த லீ சியென் லூங் (Lee Hsien Loong) தனது பதவியில் இருந்து விலகுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வருவதுடன் 20 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று (15.04.2024) இரவு லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைக்கவுள்ளார்.
அமைச்சரவையில் நீடிப்பு
சிங்கப்பூர் 1965இல் ஒரு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து மூன்று பிரதமர்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளனர்.
அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். முதலாவது பிரதமரான லீயின் தந்தையான லீ குவான் யூ, நவீன சிங்கப்பூரின் நிறுவுநராக பரவலாகக் கருதப்பட்டு 25 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தியுள்ளார்.
எனினும், பதவியில் இருந்து விலகும் பிரதமர் லீ மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிக்கவுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த இறுதி நேர்காணலில் "எல்லோரையும் விட நான் வேகமாக ஓட முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் ஓட வைக்க முயற்சித்தேன்.
நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்றும் நான் நினைக்கிறேன்" என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பொருளாதாரம்
பதவியில் இருந்து விலகும் லீ 1984இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் இணைந்ததோடு 2004இல் தலைமையேற்கும் முன் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமர் கோவின் கீழ் அவர் பதவி உயர்வு பெற்றார்.
இந்தநிலையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ பதவி வகித்துள்ளார்.
அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டது்டன் சர்வதேச நிதி சக்தியாகவும் சிறந்த சுற்றுலா மையமாகவும் சிங்கப்பூர் மாறியது.
சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளின் கணக்கெடுப்பு தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு மேலும் அவரது தொகுதி தேர்தல்களில் அதிக வாக்குப் பங்கைப் பெற்றுள்ளது.
எனினும், 2000ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தொழிலாளர் வெற்றிடங்களை தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதற்கான அவரது அரசாங்கத்தின் முடிவு கடும் அதிருப்தியைத் தூண்டியமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |