பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை (PHOTOS)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி திருகோணமலையில் நாளை (26) சனிக்கிழமை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை சில்வா சிலைக்கு முன்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படவுள்ளது.
மாலை 3.30 மணியளவில் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் மற்றும் சங்காணை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய கையெழுத்து போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும்
இணைந்து நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில்
அநாவசியமாக நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பி.சி ஆர்
பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி மூவின மக்கள் வாழும் நீர்கொழும்பில் இன்று (25) வெள்ளிக்கிழமை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
நீர்கொழும்பு பஸ் நிலையம் முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இதில் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








