சிகிரிய குன்று பாதுகாப்பு கோட்டையல்ல:சுற்றுலாத்துறை அமைச்சு
வரலாற்று சிறப்புமிக்க சிகிரிய குன்று ஒரு பாதுகாப்பு கோட்டை அல்ல என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிரியா பற்றி சரியான தகவல்கள் உலகத்திற்கு செல்வதில்லை
சிகிரிய குன்று பூங்காவாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது கூறியுள்ளார்.
சுற்றுலா தலமாக சிகிரியாவை முழு உலகமும் அறியும். எனினும் சிகிரிய குன்று தொடர்பான சரியான தகவல் உலகத்திற்கு செல்வதில்லை. சிகிரியவை உலகில் புனிதமான சுற்றுலா கலாசார மையமாக அறிவித்தாலும் அது தொடர்பில் சரியான நடைமுறைகள் இல்லை.
தொல்லியல் திணைக்களம், கலாசார மத்திய நிலையம் மற்றும் யூனிசெப் அமைப்பின் அதிகாரிகள் இணைந்து மிக சிறப்பான பேச்சுவார்த்தையை நடத்தினர்.
மன்னன் ஓய்வெடுக்க நிர்மாணித்த பூங்கா
சிகிரிய குன்று ஒரு பாதுகாப்பு கோட்டை என நினைத்துக்கொண்டு அதனை பார்க்க நாம் செல்கிறோம். சிகிரிய குன்று ஒரு பாதுகாப்பு கோட்டை என்றால், அதனை அழகாக நிர்மாணித்து, குளங்கள் மற்றும் பூந்தோட்டங்களை ஏன் நிர்மாணித்துள்ளனர்.
உண்மையில் சிகிரிய குன்று பாதுகாப்பு கோட்டை அல்ல.அது அழகான ஓய்வு பூங்கா.பேராதனை பூங்காவை போல், அழகாக ஓய்வெடுப்பதற்காக அந்த காலத்தில் இருந்த வனப்புமிகு பூங்கா.
மன்னர் உருவாக்கிய ஓய்வு பூங்கா.அங்கு அதற்கான சான்று கிடைத்து அது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது எனவும் சூலானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
காசியப்பன் சிகிரிய குன்றில் கோட்டையை அமைத்து ஆட்சி செய்தன்
எனினும் மன்னன் தாதுசேனனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த காசிப்பன் சிகிரிய குன்றில் கோட்டையை அமைத்து ஆட்சி செய்து வந்தாக வரலாற்று நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதுசேனனுக்கு பின்னர் பட்டத்து ராணிக்கு பிறந்த முகலன் என்ற இளவரசனுக்கே அரசுரிமை கிடைக்கும் என்ற நிலையில் காசியப்பன், தந்தையை கொலை செய்து வீட்டு சிகிரிய குன்றில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தன்.
கி.பி.477 -495 வரை ஆட்சி செய்த காசியப்பன், தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுற்றிலும் அகழிகளை அமைத்து இந்த கோட்டையை நிர்மாணித்தான் எனவும் வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ள யுனெஸ்கோ
இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது