தேங்காய் திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!
மாத்தளை அருகே தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய் திருடும் முயற்சியில் ஈடுபட்ட நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
மாத்தளை அருகே கொஹொலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீதே அவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் இன்று (02) அதிகாலை சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னந்தோப்பில் தேங்காய்களை திருடிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அதன்போது தென்னந்தோட்ட காவலாளி தேங்காய் திருட முயன்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயடைந்த நபர் இரத்தம் வழியும் நிலையில் அவ்விடத்தில் இருந்து தப்பியோடி, 500 மீற்றர் தூரம் வரை ஓடிய பின் கொஹோலன்வல பிரதான வீதியில் வீழ்ந்துள்ளார்.அவரை அங்கிருந்த மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தோப்பின் காவலில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தென்னந்தோப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தேங்காய் திருட முயன்ற மற்றொரு சந்தேக நபரை கைது செய்ய மகாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



