கோழி உற்பத்தி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சந்தையில் கோழி உற்பத்தி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் எச்சரித்துள்ளது.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் விற்கப்படும் முட்டைகள் மீது புதிதாக நேற்று விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகள் உற்பத்தியாளர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். அத்துடன் அதிக செலவு காரணமாக முட்டை உற்பத்திக்காக புதிய கோழி குஞ்சுகளை வளர்ப்பதை விவசாயிகள் நிறுத்தலாம் என்றும் அச்சங்கம் இன்று கூறியுள்ளது.
முட்டைக்கு தட்டுப்பாடு
இதன் காரணமாக முட்டைக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முட்டைக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதன்படி,வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை இப்போது 43 ரூபாவாகவும், பழுப்புநிற முட்டையின் விலை 45.00 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன இறக்குமதி
எனினும் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக கால்நடை தீவன இறக்குமதி பாதித்துள்ள நிலையில், பண்ணைகளில் விலங்குகளுக்கு வழங்கப்படும் போஷாக்கின்மையால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியும் குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர பண்ணை உரிமையாளர்களில் 50 சதவீதத்தினர் அதிக உற்பத்தி செலவு மற்றும் குறைந்த வருமானம் காரணமாக தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.
கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்படும் கோழியின் எடையும் குறைந்துள்ளதாகவும், வாரத்திற்கான முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் குணசேகர கூறியுள்ளார்.
எனவே அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது தற்போது சாதகமான தீர்வாகாது என்று
அவர் தெரிவித்துள்ளார்.