கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு! உண்மை நிலவரம் என்ன?
நாட்டுக்கு மிகவும் அவசியமான 40 வகையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறிப்பாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான 'டொக்லிசும்பா' (Tocilizumab) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மருந்து இல்லாத காரணத்தால் கொரோனா தொற்றாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
குறித்த மருந்து இல்லாத காரணத்தால் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் சதிஷ் ஜயசிங்க உயிரிழந்துள்ளார். அவர் பல வைத்தியர்களுக்கும் குருவானவர் என சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
'டொக்லிசும்பா' மருந்தின் தேவை குறித்து 2021 மே மாதம் 4ம் திகதி பாராளுமன்றில் தான் சுட்டிக்காட்டியதாகவும் அது ஹென்சாட்டில் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மருந்தை தாங்கள் அறிமுகம் செய்யவில்லை எனவும் வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்தவற்றையே கூறியதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த மருந்து குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதனை கேலி செய்வதாகவும் பாணிக்குப் பின் ஓடிய அமைச்சர்களிடம் அதை தவிர வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.
அரசாங்கம் எதிர்கட்சி கூறும் எதனையும் கணக்கிலெடுக்காது தங்கள் செய்வதே சரி என்ற மமதையில் செயற்பட்டு வருவதாகவும் சர்வகட்சி குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கும் பதில் இல்லை எனவும் அவர் கூறனார்.
நாடு தற்போதுள்ள அபாய நிலையில் உடனடியாக நாட்டை முடக்க வேண்டும் எனவும் நாம் கூறுவதை செவிமெடுக்காமல் இருப்பதால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கொரோனா அழிவில் ஏனைய நாடுகளை பின்தள்ளி இலங்கை முன்னிலை பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.