வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிசூடு! வெளியானது காரணம்..
வெனிசுவேலாவின் தலைநகர் கரகாஸ் நகரில் நேற்றையதினம்(5) மாலை துப்பாக்கிச் சத்தமும், வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாக வெளியாகிய காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ கைதானதாக கூறப்படும் சூழ்நிலையில், நகரம் முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உச்ச எச்சரிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சத்தம்
சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள காணொளிகளில், கரகாஸ் வானில் வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், வேறு ஒரு காணொளியில் துப்பாக்கிச் சத்தமும் கேட்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகரில் உள்ள பாதுகாப்பு அணிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், மிராஃப்ளோரஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள உர்தனெட்டா அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதுகுறித்து வெனிசுவேலா தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அனுமதியின்றி பறந்த ட்ரோன்களை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்” என தெரிவித்துள்ளது.
முழுமையாக கட்டுப்பாட்டில்
மேலும், எந்தவித மோதலும் நடைபெறவில்லை. நாடு முழுவதும் நிலைமை அமைதியாக உள்ளது” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இருப்பினும், அந்த ட்ரோன்களை யார் இயக்கியது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி அளித்த தகவலில், வெனிசுவேலாவில் இருந்து வரும் துப்பாக்கிச் சத்தம் தொடர்பான தகவல்களை அமெரிக்கா கவனமாக கண்காணித்து வருவதாகவும், “இந்த சம்பவங்களில் அமெரிக்கா எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
மிராஃப்ளோரஸ் மாளிகை அருகே செயல்பட்ட பல பாதுகாப்பு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட குழப்பமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெளியான தகவலின் படி, அந்த பகுதியில் பறந்த ஒரு ட்ரோனை மிராஃப்ளோரஸ் பொலிஸாரும் மாளிகை பாதுகாப்பு அணியும் சுட்டு வீழ்த்த முயன்றதாகவும், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.