முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொல்லுகளுடன் களமிறங்கிய இராணுவத்தினர்! இளைஞர்கள் மீது தாக்குதல்
முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெருமளவிலான இராணுவத்தினர் பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும், இளைஞர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன்,இளைஞர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன்போது நிலைமையை ஆராய சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விஜயம் செய்திருந்ததுடன்,தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர்,இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன்,துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினரின் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முல்லைத்தீவு - விசுவமடு பகுதி யுத்த களம் போன்று மோசமான நிலையில் காணப்படுகின்றது. இராணுவத்தினர் பொல்லுகளுடன் எந்த நேரத்திலும் தாக்கும் நோக்கில் கடுமையாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.