அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! பொலிஸார் வெளியிட்ட தகவல்
காலி - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இன்று காலை (04) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணை
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி (பிஸ்டல்) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், வீட்டின் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டி இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக அஹுங்கல்ல பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.