மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தும் செயற்குழு - சஜித் அணி ஆவேசம்
மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் செயற்பாடுகளையே நாடாளுமன்ற விசேட செயற்குழு முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்ற சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகவே நாடாளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் குழுவின் செயற்பாடுகள் இதுவரை காலமும் முன்னேற்றகரமான எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. செயற்குழுவின் காலம் மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே மாத்திரம் இடம்பெற்று வருகின்றன.
நெருக்கடிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்வைத்த பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையிலான தனிநபர் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த சாதகமான பரிந்துரைகளை அரசு கவனத்திற்கொள்ளவில்லை.

நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பினர் நெருக்கடிகளை மேலும் உருவாக்கும் வகையிலான யோசனைகளையே முன்வைத்துள்ளனர்.
இளைஞர் பிரதிநிதித்துவம், விசேட தேவையுடையவர்களுக்கான பிரதிநிதித்துவம் எனப் புதிதாக முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையிலான யோசனைகளே அங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் செயற்பாடுகளையே இந்த விசேட செயற்குழு முன்னெடுத்து வருகின்றது.
பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் யோசனையை அரசு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தால், அதற்கு எமது தரப்பிலிருந்து நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்." என்றார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan