துப்பாக்கிச்சூட்டு முயற்சி முறியடிப்பு! பொலிஸாரால் 4 பேர் கைது
திட்டமிடப்பட்ட துப்பாக்கிச்சூட்டு முயற்சியை முறியடித்து 4 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் சோதனை
கொழும்பு, கொள்ளுப்பிட்டி - ஆல்பர்ட் வீதியில், நேற்றுமுன்தினம்(10) புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரைக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் ஒருவர், தான் வைத்திருந்த பையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீசப்பட்ட பையில் இருந்து ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று, 30 தோட்டாக்கள், கத்தி ஒன்று மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தப்பிச் சென்ற சந்தேகநபர் உட்பட மேலும் மூவர் மாளிகாவத்தையில் உள்ள போதிராஜா மாவத்தை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்களை கைது செய்யும்போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14, வெல்லம்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25, 40 மற்றும் 48 வயதுடையவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு அவர்கள் தயாராகியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam