முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, நவலோக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணை
இந்த நிலையில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று முன் தினம் (16.10.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும், அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.

பிணையில் விடுவிப்பு
இதனை தொடர்ந்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. அதன்படி, சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்கள் மூலம் விடுவிக்கவும், மேலும் அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
விசாரணைகளின் முன்னேற்றம் டிசம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஷிரந்தி ராஜபக்ச சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் நவலோகா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்