சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் இன்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
சிரிலிய சவிய அமைப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சர்ச்சைக்குரிய 'சிரிலிய சவிய' கணக்கில் உள்ள பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவாலோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராலோ பயன்படுத்தப்படவில்லை.

சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட பணம் இன்னும் கணக்கில் பாதுகாப்பாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. ஸ்கேனரை வாங்குவதற்காகச் சேகரிக்கப்பட்ட இந்த சிரிலிய கணக்கிலிருந்து ஷிரந்தி ராஜபக்ச ஒரு ரூபாயைக் கூட தனது சொந்தப் பயன்பாட்டிற்கோ அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்கோ எடுக்கவில்லை.
மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் உட்பட, சேகரிக்கப்பட்ட அனைத்துப் பணமும் இன்றும் அந்தக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது.
ராஜபக்சகுடும்பத்தினர்
''உதாரணமாக, கிராமக் கோயிலில் ஒரு கோபுரம் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து சிறிது பணம் சேகரிக்கப்படுகிறது.
ஆனால், யாராவது வந்து ஒரு கோபுரத்தைக் கட்டியவுடன், அந்தக் கோயிலில் சேகரிக்கப்பட்ட பணம் மீண்டும் நன்கொடையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. அந்தப் பணம் கோயிலின் அறப்பணிகளுக்காக வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.''

அதுபோலவே, நன்கொடையாளர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாததால், வசூலிக்கப்பட்ட இந்தப் பணம் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒரு வார்டைக் கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சஅதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை.
அந்தப் பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. ராஜபக்சகுடும்பத்தினர் இந்தப் பணத்தை உண்பதற்கோ குடிப்பதற்கோ எடுக்கவில்லை.
ஷிரந்தி ராஜபக்ச
அதே போன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற ஊடக அறிக்கைகள் பொய்யானவையாகும்.

சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுவிட்டார் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. ஷிரந்தி ராஜபக்ச சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முன்னாள் முதல் பெண்மணி தனது விமானத்தில் புறப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்புதான் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்கியது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.