முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பயணத் திகதி! ஷிரந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் பயணமாக தீர்மானித்தார் என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஷிரந்தி ராஜபக்ச, மருத்துவ ஆலோசனையில் அடிப்படையில் முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சைக்காகவே வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாறாக எந்தவொரு விசாரணையையும் தவிர்ப்பதற்காக அல்ல.
திடீரென கிடைத்த அறிவிப்பு
அவர் விமான நிலையத்திற்கு வருகைத் தந்து, அங்கிருந்து புறப்படத் தயாரான நேரம் வரை எந்தவொரு விசாரணைக்குழுவும், அவருக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிய சந்தர்ப்பத்தில்தான் திடீரென அவருக்கு விசாரணைக்கான அழைப்புக் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் ஆணைக்குழுக்களின் முன் பிரசன்னமாகியிருக்கின்றார்.

விசாரணைகளைத் தவிர்த்தார், விசாரணைகளுக்கு இடையூறு செய்தார் என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கவில்லை.
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவருக்கான தனியுரிமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே, அந்தத் தனியுரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில், ஏற்கனவே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சையைப் பெறுவதற்காகவே அவர் வெளிநாடு செல்லத் தயாரானார் என்பது தெளிவானது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்