நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்த ஷிரந்தி ராஜபக்ச மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசியா எயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று இரவு (05) நாட்டை வந்தடைந்தார்.
சிறப்பு விருந்தினர்கள் வசதி
இவர் பொது மக்களை தவிர்த்து விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்காக சிறப்பு விருந்தினர்கள் பயன்படுத்தப்படும் 'கோல்டு ரூட்' வசதியை , 216 அமெரிக்க டொலர்கள் செலுத்தி பயன்படுத்தி அவர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 24 திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 16 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
கைது செய்யப்படுவதை தடுக்க மனுத்தாக்கல்
"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த மனுவை அவர் தாக்கல் செய்த நிலையில், மனு இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மேலும், மருத்துவ நிலைமைகள் காரணமாக சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கண் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற மனுதாரர், குமட்டல், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் இதயப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும், சிகிச்சைக்கு பிறகு இலங்கை திரும்பி குற்றப் புலனாய்வுத் துறையின் முன் முன்னிலையாக விரும்புவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan