இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி.. விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச, நேற்றிரவு நாடு திரும்பினார்.
இதன்போது அவர், விமான நிலையத்தில் கைது செய்யப்படாத நிலையில், வரும் நாட்களில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் வருகை தரும் போது கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அத்தகைய நிகழ்வைத் தடுக்குமாறு நேற்றைய தினம், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவசர மனு
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் சிரந்தி ராஜபக்ச மனுதாரராகவும், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) பணிப்பாளர் எதிர்மனுதாரராகவும் பெயரிடப்பட்டிருந்தனர். சிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 16ஆம் திகதி அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
அப்பயணத்திற்கு முந்தைய நாள் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
செப்டெம்பர் 24ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்தில் வைத்து அழைப்பாணை வழங்கப்பட்டதாகவும், அக்காலப்பகுதியில் அவருக்கு எதிராக பயணத் தடை எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.
கைது நடவடிக்கை..
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பாணையைப் பெற்ற பின்னரே சிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றதாக பின்னர் தெரிவித்த போதிலும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த அறிக்கைகளை மறுத்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் FCID இடமிருந்து அவருக்கு எவ்வித அழைப்பாணையும் கிடைக்கவில்லை என்றும், அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக விமான நிலையத்தில் இருந்தபோதே அழைப்பாணை கிடைத்ததாகவும் அந்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
சிரந்தி ராஜபக்சவின் தலைமையில் இயங்கிய சிறிலிய சவிய அமைப்பின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளில் நீடிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் அவர் FCIDஇல் முன்னிலையாக தவறினால், அவருக்கு எதிராக பயணத் தடையைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர் திரும்புவதற்கு ஒரு தற்காலிக திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சிங்கப்பூரில் பெற வேண்டிய மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தே உண்மையான திகதி அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவரது மருத்துவ நிலைமை எனக் கூறப்பட்ட போதிலும் அவர் வெளியே நடமாடுவதைக் காட்டும் சமூக ஊடகங்களில் காணொளிகள், வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் தற்போது நாடு திரும்பியுள்ளார்.