அரச பேருந்து சாரதியின் மோசமான செயல்.. சிரமத்திற்குள்ளாகும் பாடசாலை மாணவர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம், திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களை பேருந்து சாரதி ஏற்றிச் செல்ல மறுத்துள்ளார்.
மாணவர்கள், ஏ 9 வீதியில் பலநூற்றுக்கணக்கான பேருந்துகள் பயணம் செய்கின்ற போதும் உரிய நேரத்தில் பாடசாலை செல்லவோ பாடசாலையில் இருந்து வீடுசெல்லவோ முடியாத நிலை பல வருடகாலமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நேற்று மாங்குளம் மகாவித்தியாலயம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை முடிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் காத்திருந்துள்ளனர்.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு..
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஆசிரியர்களை மாத்திரம் பேருந்தில் ஏற்றிவிட்டு மாணவர்களை ஏற்றாது செல்ல முற்பட்டபோது மாணவர்களை ஏற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த சாரதி மாணவர்களை ஏற்ற முடியாது என தெரிவித்து பேருந்தில் ஏறிய மாணவர்களை ஏறமுடியாத அளவில் பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, பேருந்தில் ஏறிய மாணவி ஒருவர் தவறி விழ நேரிட்ட நிலையில் நடத்துனரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறான சாரதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலவருடங்களாக தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.